மழை மானி (rain gauge) என்பது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு யூனிட் பகுதியில் பெய்யும் மழையை கணக்கிட உதவும் கருவி. திறந்த வெளியில் வைக்கப்படும் இந்த கருவியின் சேகரிப்பு கொள்கலனில் சேகரமாகும் மழைநீரின் அடிப்படையில் மில்லி மீட்டரில் கணக்கிடப்படுகிறது. ஒரு மில்லி மீட்டர் மழை பொழிவு என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் பொழிந்த மழை நீரின் அளவிற்கு சமம். இந்த கருவியை பயன்படுத்தியே வானிலை செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை மில்லி மீட்டர் மழை பெய்தது எனக் கூறுவார்கள்.
இந்நிலையில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுவதிலும் உள்ள பிர்காக்களில் (வருவாய் கிராமங்கள்) சுமார் 1,000 தானியங்கி மழை மானிகள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தின் சராசரி மழைப் பொழிவு 960 மில்லி மீட்டர். இதன் மூலம் பெறப்படும் மொத்த நீர் மேற்பரப்பு நீர் வள ஆதாரமான 711 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள், நீர் செறிவூட்டும் துளைகள் போன்ற மேலும் பல கட்டமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வரும் நிலையில், வெள்ளம் மற்றும் வடிநிலங்களின் நீர் ஆதாரங்களை மதிப்பிட மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்கவே தானியங்கி மழை மானிகள் அமைக்கப்பட உள்ளன.