காமெடிகளின் மன்னன் கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள். 02.06.1996 தேதியிட்ட ஆனந்த விகடனில் அவரது பேட்டி வெளியாகியது. அதில் அவர் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான பகுதிகள்…
“சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா… அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன்”
“பாய்ஸ் கம்பெனியிலிருந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மளால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது”
“வளர்ந்து பெரிய ஆளான பிறகு ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடி தான் பிடிச்சேன்’னு சொல்றது, இப்ப ஒரு ஃபேஷனா போச்சு! அதெல்லாம் நான் சொல்ல மாட்டடேன்”
“செந்திலுக்கு பிளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்பு தான்! என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி நிப்பான். செட்டுக்கு போயிட்டு அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்”
“மண்ணுக்கும் காமெடிக்கு என்னங்க சம்பந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன..கோயம்பத்தூர் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி”
ஒரு நடிகன் எப்படி இருக்கணும் என கவுண்டமணி சொல்வது “தன்னை பத்தி நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடனும்! பெட்டிக்கடையில் பீடியைக் கூட கட்டுக்கட்டா உள்ளே தான் வெச்சிருப்பான். அப்போ தான் அதுக்கு மரியாதை”
“என் பிறந்தநாள் என்னன்னே மறந்து போச்சு! முக்கியமா, டிவிக்கு பேட்டி குடுக்குறதில்லை. கவுண்டமணியை சினிமால மட்டும் பாரு. அப்ப தான் கிக்!”
“எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்த வரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன். கூலி வாங்கிட்டு வரேன்.”
“என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேரைப் பார்க்கணும்; பேசணும்; சந்தோஷமா சிரிக்கணும்… அவ்வளவு தான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்… ரைட்டா?” என்று பேசிய கவுண்டமணியின் காமெடிகள் எப்போதும் இளமையானவை தான். ஹாப்பி பர்த்டே காமெடி கிங்!