புதுடெல்லி: கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய், கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை போல சூழலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.
சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் அண்மையில் உயர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக மத்திய அரசு தடை விதித்தது.
அடுத்தது சர்க்கரை
இந்தநிலை கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்க்கரை ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள அரசு, அதனை அக்டோபர் 31 முதல் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் சர்க்கரை இருப்பினை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிகரித்து வரும் விலைவாசியினை தடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
எனினும் டிஜிஎப்டி உத்தரவின் படி உணவு மற்றும் பொது விநியோகத் துறை இயக்குனரகத்தின் ஒப்புதலுடன் சர்க்கரை ஏற்றுமதி பகுதியளவு செய்யபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதியினை 100 லட்சம் மெட்ரிக் டன்னாக கட்டுப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்றுமதியினை தடை செய்வதன் மூலம், அதன் விலையினை குறைக்க முடியும் என்ற அரசு நம்புகிறது. மொத்த உணவு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் 2021-2022 (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவு 2022 ஜூன் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31, 2022 வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18, 2018-19, 2019-20 கரும்பு அரவைப் பருவங்களில் முறையில் 62 மெட்ரிக்டன், 38 மெட்ரிக்டன், 59.60 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2020-21-ல் கரும்பு அரவைப் பருவத்தில் 60 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 70 மெட்ரிக்டன் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2021-22 நடப்பு கரும்பு அரவைப் பருவத்தில் 90 மெட்ரிக்டன் அளவிற்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சர்க்கரை ஆலைகளில் இருந்து 82 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 78 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு உபயோகத்திற்காக 2 முதல் 3 மாதங்களுக்காக 60 முதல் 65 மெட்ரிக்டன் அளவிற்கு சர்க்கரை இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் உள்நாட்டில் சர்க்கரை விலை கட்டுக்குள் இருக்கும் என தெரிகிறது.