சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி நாளை (26-ந்தேதி) சென்னைக்கு வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.12,400 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக அவர் நாளை மாலை ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். மாலை 5.10 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

அதன் பிறகு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அவர் நேரு ஸ்டேடியத்துக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி காரில் செல்லும் போது வழி நெடுகிலும் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை வழிநெடுகிலும் பா.ஜனதா தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிப்பதற்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா நிர்வாகிகள் சென்னைக்கு திரண்டு வருகிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை 25 இடங்களில் வித்தியாசமான முறையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பல்வேறு அணியினரும் களத்தில் இறங்குகிறார்கள். விவசாய அணியினர், மகளிர் அணியினர், வக்கீல் அணியினர், நெசவாளர் அணியினர், இளைஞர் அணியினர் 25 விதமான வரவேற்புகளை அளிக்க தயாராகி வருகிறார்கள். விவசாயிகள் நெற்கதிர்களை பிடித்தபடி நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள். மேலும் திருவள்ளுவர் சிலை ஒன்றை கொண்டு வந்து நிறுத்தியும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு அளிப்பது தொடர்பான பணிகளில் பா.ஜனதா கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் நடைபெறும் நேரு ஸ்டேடியத்திலும் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அங்கு ஆயிரக்கணக்கானோர் அமருவதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்க பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பா.ஜனதா சார்பில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கவும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 400 வி.ஐ.பி.க்களும் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக 10 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி.சரஸ்வதி உள்பட 10 பேர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களுடன் 10 நிமிடம் பேசுகிறார். பின்னர் அவர்களுடன் மோடி குழு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.

விழா முடிந்ததும் பிரதமர் மோடி மீண்டும் காரில் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பழைய விமான நிலையம் செல்கிறார். பின்னர் இந்திய விமானப் படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.