karthi: மணிரத்னம் பட உதவி இயக்குநர் டு படத்தின் ஹீரோ; 15 ஆண்டுகால சினிமா பயணம்!| Photo Story

பருத்திவீரனில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த கார்த்தி இன்றைக்கு பொன்னியின் செல்வனின் நாயகன். அவரது பிறந்தநாள் இன்று. கார்த்தியின் சினிமா பயணம் பற்றி பார்ப்போம்.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தவர். அதற்கும் தற்போது அவரது படங்களிலேயே நாயகனாக உயர்வதற்கும் இடையில் 15 வருடங்கள் சிறந்த படங்களில் பணியாற்றிய அனுபவம் கார்த்திக்கு உண்டு.

`பருத்தி வீரன்’ அறிமுகமாகும் கதாநாயகர்கள் எடுக்க தயங்கும் பாத்திரம். ஆனால் அதில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துக் காட்டியவர், கார்த்தி.

எந்தப் படத்தின் சாயலும் அடுத்த படத்தில் இருக்காது. எந்தப் படத்தின் ஜானரும் அடுத்த படத்தில் இருக்காது. கார்த்தி தேர்ந்தெடுக்கும் படங்கள் அப்படி.

`பையா’வில் காதலனாக உருகுகிற அதே கார்த்தியை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பார்க்க முடியும். இரண்டும் ஒரே ஆண்டில் வெளியான படங்கள்.

`மெட்ராஸ்’ படத்தில் காளி கதாபாத்திரம் நண்பனுக்காக உருகும் இடத்திலும் தன்னைச் சுற்றிய அரசியல் புரியும் போது சீறும் இடத்திலும் கோபக்கார இளைஞனாக நடித்திருப்பார்.

இவர் படங்களில் மற்ற நடிகர்களுக்கும் சமமான இடம் இருக்கும். தன்னை முன்னிலைப்படுத்திடும் கதாபாத்திரம் தாண்டி கதையை முன்னிலைப்படுத்தும் நாயகர்களில் ஒருவர்.

விவசாயிகளுக்கு ஆதரவு, நடிகர் சங்கத் தேர்தல் எனப் பொது விஷயங்களிலும் கார்த்தியைப் பார்க்க முடியும்.

பா.ரஞ்சித், ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்களின் இரண்டாவது படத்தில் நாயகன் கார்த்தி. கார்த்தியின் படங்களுக்கு பிறகு இவர்கள் அடைந்த உயரம் அதிகம்.

பரிசோதனை முயற்சிகள் செய்வதற்கு கார்த்தி தயங்கியதே இல்லை. சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என வரிசை கட்டி நிற்கின்றன இவருக்கு அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள்.

சினிமா தாண்டி, பொது சமூக தளத்திலும் இயங்கும் கலைஞன் கார்த்தியின் பிறந்தநாள் இன்று. இன்னும் புதிய களங்களில் பயணிக்க வாழ்த்துகள் கார்த்தி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.