புதுடெல்லி: ‘‘இந்துக்களை, காங்கிரஸ் கட்சி அதிகம் வெறுப்பது ஏன்?’’ என குஜராத்தின் படிதார் இன தலைவர் ஹர்திக் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக இருந்தவர் ஹர்திக் படேல். இவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, பா.ஜ.க மற்றும் அதன் விரைவான முடிவெடுக்கும் தன்மையை புகழ்ந்து வந்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
ராமர் கோயில் பற்றி குஜராத் காங்கிரஸ் தலைவர் தெரிவித்த கருத்து ஒன்றுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள ஹர்திக் படேல், ‘‘மக்களின் உணர்வுகளுடன் காங்கிரஸ் கட்சி விளையாடுகிறது, எப்போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை தாக்குகிறது’’ என நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
இந்துக்களை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் அதிகம் வெறுப்பது ஏன்? பகவான் ராமரை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?’’ என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘‘பா.ஜ.க அறிவுறுத்தல்படி ஹர்திக் படேல் செயல்படுகிறார். பா.ஜ. கட்சியில் அவர் இணையவுள்ளார்’’ என தெரிவித்தனர்.
ஹர்திக் படேலை, ஆம் ஆத்மி கட்சிக்கு இழுக்க, அரவிந்த் கேஜ்ரிவாலும் முயன்று வருகிறார்.