பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் விடுதி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் படித்தக் காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் பெண் மாணவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். அந்த சூழல் மிக மோசமாகவே இருக்கும். ஒரு பெண் கல்லூரியில் சேர்ந்தால், எல்லோரும் அவளை முறைப்பார்கள். ஆனால் இப்போது, பல பெண்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளைத் தொடர்கின்றனர். சமூகத்தில் மற்றம் ஏற்பட்டு, வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஆண்கள் அதிகம் மது அருந்துகிறார்கள். அதைத் தடை செய்ய வேண்டும் என்ற பெண்களின் கோரிக்கையை ஏற்று மது அருந்துவதை எனது அரசு தடை செய்தது. வரதட்சணை முறை, குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரசாரங்களையும் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவதைவிடக் கொடுமை எதுவும் இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும், நாங்கள் அனைவரும் தாய்க்குப் பிறந்தவர்கள், ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால் குழந்தை பிறக்குமா? எனவே, நீங்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
திருமணம் செய்ய வரதட்சணை கேட்கிறீர்கள். இதைவிட பெரும் தவறு எதுவும் இல்லை. நான் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் வரதட்சணை வாங்கவில்லை என்று மணமகன் தரப்பு எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தால்தான் திருமணத்தில் கலந்து கொள்வேன் என அனைவரிடமும் கூறியிருக்கிறேன்” என்றார்.