கந்து வட்டி கொடுமை காரணமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கொரோனா பரவலின் போது ரங்கநாயகி என்ற பெண்ணிடம் சிறுக சிறுக, 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.
கடனை செலுத்த முடியாத காரணத்தினால் வட்டி அதிகரித்து 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பேருக்கு எழுதி வைக்குமாறும் அந்த பெண் மிரட்டியதாக தெரிகிறது.
கந்துவட்டி கொடுத்த ரங்கநாயகியும் அவரது கணவர் சேகர், மகன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சித்ராவையும், அவரது இரு மகள்களையும் மிரட்டியதன் காரணமாக மனமுடைந்து கடந்த 7ஆம் தேதி சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீ காய தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் துறையினர் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
newstm.in