ஸ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் பண்டிட் அரசு ஊழியர்கள் 13-ம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் பட்காம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த குமாஸ்தா ராகுல் பட் (35) என்ற காஷ்மீர் பண்டிட்டை கடந்த 12-ம் தேதியன்று அலுவலகத்திலேயே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அரசு ஊழியர்களாக பணியாற்றும் காஷ்மீர் பண்டிட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரின் பல பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது.
காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஷேக்போரா என்ற இடத்தில் பண்டிட்கள் முகாம் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை சந்தித்துப் பேசினார். பண்டிட் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் பணிகள் தொடர்பான அவர்களது குறைகள் தீர்க்கப்படும் என்றும் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். எனினும், பண்டிட் அரசு ஊழியர்கள் நேற்று 13-ம் நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.