உலகளவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, மக்கள் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வருவாய் இழப்பு, வேலையிழப்பு, வேலையின்மை என பல பிரச்சனைகளால் தவித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் தொழிலாளர்களின் வேலை நேரம் என்பது தொற்றுக்கு முந்தைய நேரத்தினை விட 3.8% குறைந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
அது மட்டும் அல்ல , இந்த காலகட்டத்தில் உலகளவில் 11.2 கோடி பேர் வேலையினை இழந்திருக்கலாம் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.
பெண்கள் அதிக வேலையிழப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த காலக்கட்டத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதில் பெருந்தொற்று காலகட்டத்தில் 100 பெண்களில் 12.3% பெண்கள் தங்கள் வேலையினை இழந்துள்ளதாகவும், இதே ஆண்களில் 100 பேரில் 7.5% பேர் தங்களது வேலையினை இழந்துள்ளதாகவும் கூறுகின்றது.
மனிதாபிமான அணுகுமுறை
சீனாவில் போடப்பட்ட புதிய கட்டுப்பாடுகள், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை என பல காரணிகளுக்கும் மத்தியில், சர்வதேச அளவில் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள்கள் விலையானது அதிகரிதுள்ளது. இதற்கிடையில் ILO தனது உறுப்பு நாடுகளை , இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மனிதாபிமான அணுகுமுறையை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
வேலை நேரம் குறையலாம்
உலகளாவிய அளவில் கடன் பிரச்சனை, நிதி நெருக்கடி, சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என பல காரணிகளினால், 2022ம் ஆண்டில் வேலை செய்யும் நேரங்கள் குறையலாம். மேற்கண்ட ILO அறிக்கையில், உயர் வருமானங்கள் கொண்ட நாடுகளின் வேலைநேரங்கள் ஓரளவு அதிகரித்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வேலை நேரங்கள் முறையே 3.6 மற்றும் 5.7% குறைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
பெண்களின் பங்கு சரிவு
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தொழிற்சங்கங்கள், வேலையின்மை பிரச்சினையை தீர்க்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தின. மேலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பெண்களில் வேலைகள் குறைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரம் தொடர்பான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
சம்பளம் அதிகரிக்கணும்
மேலும் ஊழியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு நல்ல வேலைகளையும், நல்ல ஊதியத்தினையும் வழங்கவேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இல்லை. பெரும்பாலான ஊழியர்கள் எந்த விதமான சமூக பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த முறையில் ஊழியர்களாக உள்ளனர். சம்பளம் அதிகம் இல்லாததால் அவர்களின் வாங்கும் திறனும் குறைகிறது.
ஊதியம் குறித்தான சட்டம்
கடந்த 2019ல் ஊதியம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரையில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1948 ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச சம்பளம் , வாழ்வாதார சம்பளம் மற்றும் நல்ல சம்பளம் ஆகியவற்றை அமல்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் இன்று வரையில் அமல்படுத்தப்படவில்லை என BMS பொதுச் செயலாளர் பினோய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உண்மையான நிலை?
அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறுகையில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கணிப்புகள் இந்தியாவின் உண்மையான நிலையைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. எங்கள் கணக்கீட்டின் படி, கொரோனா ஊரடங்கின்போது 30 -60% ஊழியர்கள் வேலைகளை இழந்திருக்கலாம். அதில் இன்னும் 5 கோடி பேர் இன்னும் எந்த வேலையிலும் சேரவில்லை.
மீட்கவே முடியாது?
இதே எம்எஸ் எம் இ அறிக்கையில் படி, மூன்றில் ஒரு பங்கினை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது. பழங்கள், காய்கறிகள் விலை அதிகரிப்பால், வியாபாரிகள் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர். முதல் லாக்டவுனுக்கு பிறகு 50% பெண்கள் நகரத்திற்கு திரும்பியுள்ளனர். எப்படியிருப்பினும் ஒட்டுமொத்த பெண்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. எங்களுக்கு அதிக வேலைகள் தேவை. அரசுகள் நிறைய ஊக்குவிக்க வேண்டும். ஆட்குறைப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கவுர் தெரிவித்துள்ளார்.
ILO report says world lost 11.2 crore jobs in march quarter 2022
According to the ILO, the working hours of workers worldwide in the first quarter of this year were 3.8% lower than before the pandemic.