நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற மே 26, 2014 முதல் இந்த 8 ஆண்டுகளில் மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ.,) பட்டியலிடப்பட்டுள்ள 1,450 நிறுவனங்கள் சந்தை மதிப்பில் இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன. பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான அரசின் ஆதரவு ஆகியவை நிறுவனங்களுக்கு சாதகமானதாக அமைந்தது என்கின்றனர்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு ரூ.85.2 லட்சம் கோடியாக இருந்தது. இன்று (மே 25) அதன் மதிப்பு சுமார் மும்மடங்கு உயர்ந்து ரூ.251 லட்சம் கோடியாக உள்ளது. பிரைம் தரவுதளம் ஒருங்கிணைத்த தகவல் படி இந்த காலக்கட்டத்தில் 220 நிறுவனங்கள் சந்தை மூலம் ரூ.3.2 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
இந்த 8 ஆண்டுகளில் 1,450 நிறுவனங்களின் சந்தை மதிப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது. சாதனா நைட்ரோ கெம் நிறுவனம் (300 மடங்கு), டான்லா பிளாட்பார்ம்ஸ் (240 மடங்கு) பாலு போர்ஜ் நிறுவனம் (237 மடங்கு), டியூகான் இன்ப்ரா டெக்னாலஜிஸ் (236 மடங்கு) மற்றும் ஹிந்துஸ்தான் புட்ஸ் (209 மடங்கு) ஆகிய நிறுவனங்கள் சந்தை மதிப்பில் அபார வளர்ச்சி கண்டுள்ளது.
ரூ.10,000 கோடி டூ ரூ.3.4 லட்சம் கோடி
இது தவிர 2014ல் ரூ.5 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தற்போது 34 மடங்கு முதல் 7 மடங்கு வரை ஏற்றம் கண்டுள்ளன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2014ல் ரூ10,135 கோடி சந்தை மதிப்பு கொண்டதாக இருந்தது. தற்போது அந்நிறுவன மதிப்பு ரூ.3,45,548 கோடி. அதே போல் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.14,171 கோடியிலிருந்து தற்போது 14 மடங்கு வளர்ந்து ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.
2014ல் ஒரு லட்சம்… இன்று பல லட்சம்!
ஐ.டி., நிறுவனமான மைண்ட்ட்ரீ (9 மடங்கு), பிரிட்டானியா (7.7 மடங்கு), பேஜ் இன்டஸ்ட்ரீஸ் (7.38 மடங்கு), பெர்கர் பெயின்ட்ஸ் (7.24 மடங்கு), டாடா நுகர்வொர் பொருட்கள் (6.87 மடங்கு) அதானி பவர் (5 மடங்கு) ஆகிய நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. 2014ல் இந்நிறுவனங்களில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அவை பல லட்சங்கள்.
அரசின் முயற்சி… அபரிமித வளர்ச்சி
கடந்த எட்டு ஆண்டுகளாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், அரசின் ஆதரவு ஆகியவை அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்கள். இந்தியாவின் பெரிய உள்நாட்டு சந்தை, சாதகமான மக்கள்தொகை ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியாவை மாற்றியுள்ளது. நுகர்வோர்கள் அதிகம் செலவிடுவது, விரைவாக டிஜிட்டல் முறைக்கு மாறுவது ஆகியவை பரந்துபட்ட முதலீட்டு வாய்ப்பை உலக முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்திய பணவீக்கம், புவிசார் அரசியல் பிரச்னைகள் சில தடைகளை உண்டாக்கினாலும் நீண்ட கால அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்றனர்.