புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 2019-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீரின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரிடம் பல கட்டங்களாக என்ஐஏ விசாரணை செய்தது. இந்த வழக்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் (தேசிய புலானாய்வு அமைப்பு நீதிமன்றம்) நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 19-ம் தேதி தீர்ப்பு வழங்கிய என்ஐஏ நீதிமன்றம், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. அவருக்கு இந்த வழக்கில் என்ன தண்டனை என்ற விவரம் வரும் 25-ம் தெரிவிக்கப்படும் என அறிவித்தது.
‘‘அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், யாசின் மாலிக் சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் யாசின் மாலிக் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து அவர் இதற்காக நிதியுதவி பெற்றுள்ளார். இதற்காக மிகப்பெரிய கட்டமைப்பை அவர் உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு என்ஐஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதன்படி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் யாசின் மாலிக்கிற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என என்ஐஏ தரப்பு வழக்கறிஞர் கோரினார். இந்த வழக்கில் பாதுகாப்பு தரப்பினர் ஆஜரான வழக்கறிஞர் ஆயுள் தண்டனை வழங்குமாறு கோரினார்.
இந்த வழக்கில் இரண்டு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும். ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
வெவ்வேறு வழக்குகளுக்கு வெவ்வேறு சிறைத் தண்டனைகளும் அபராதங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் மொத்தமாக அவர் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் யாசின் மாலிக் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாசின் மாலிக்கிற்கு தண்டனை வழங்கும் முன்பாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் பல இடங்களில் கல்வீசி தாக்குதல்கள் நடந்தன. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.