இராமேஸ்வரம் அருகே கடற்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, முகம் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் 6 பேரை ஊர்மக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். 6 பேரும் வேலை செய்து வந்த இறால் பண்ணையை பொதுமக்கள் சூறையாடி தீ வைத்த நிலையில், பண்ணை மூடி சீல் வைக்கப்பட்டது.
இராமேஸ்வரம் அடுத்த வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்க தக்க பெண், செவ்வாய்கிழமை கடல் பாசி எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள இறால் பண்ணை அருகே புதர் பகுதியில் அரை நிர்வாணக் கோலத்தில், முகம் கருகிய நிலையில் அந்த பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அவர் கூட்டுப்பலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக தகவல் பரவியது
இரு தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அங்குள்ள இறால் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்த ஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேலி செய்ததாக , அந்த பெண்ணின் கணவர் கூறியதால் , அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு காரணம் அவர்களாகத்தான் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் இறால்பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த 6 இளைஞர்களையும் சரமாரியாக அடித்து உதைத்து இறால் பண்ணைக்கும் தீவைத்தனர். விசாரணைக்கு வந்த 4 போலீசாரால் இந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க இயலவில்லை.
இந்த தாக்குதலில் ஒடிசா மாநில இளைஞர்கள் 5 பேருக்கு மண்டை உடைந்து, ஒருவருக்கு முதுகெலும்பு உடைந்து பலத்த காயம் அடைந்தார். கொல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்த உறவினர்களும் ஊர்மக்களும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் தொடந்து சாலையில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டதால் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்றவர்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மேற்கொண்டு நகர முடியாமல் பல மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
போலீசாரிடம் பிடிபட்டுள்ள 6 வடமாநில இளைஞர்களில் 3 பேர் ஒரிய மொழி பேசுவதாலும் மற்ற மூவரும் பேச முடியாத அளவுக்கு பலமான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாலும் முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறினார்.