இந்தியாவில் ஆஷா (ASHA – Accredited Social Health Activist) ஊழியர்களாகப் பணிபுரியும் சுமார் 10 லட்சம் பெண்களை உலக சுகாதார நிறுவனம் கௌரவித்துள்ளது.
இந்தியாவில், சுமூக சுகாதாரம், மகப்பேறு பராமரிப்பு, தடுக்கக்கூடிய நோய்களுக்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குதல், உயர் ரத்த அழுத்த சிகிச்சை, காசநோய்க்கான சிகிச்சை, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சுகாதார மேம்பாட்டுக்கு, ஆஷா அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவலின்போது, தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த இவர்கள் தங்களின் அயராத முயற்சிகளை கொடுத்து வந்தனர். அதாவது, ‘ஆஷா’ ஊழியர்களாகப் பணிபுரியும் இந்தியாவில் உள்ள சுமார் 10 லட்சம் பெண்கள், கோவிட் தொற்றின்போது, எளிதில் அடைய முடியாத கடை கோடி கிராமங்களில், ஏழ்மையில் உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார சேவைகளை அணுகுவதை உறுதிசெய்ததோடு, இவர்களை சுகாதார அமைப்போடு இணைத்துப் பெரும் பங்காற்றினர். வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிந்தனர். இந்திய அரசின் இந்த சுகாதாரப் பணியாளர்கள், கிராமப்புற இந்தியா தொடர்புகொள்ளும் முதல் புள்ளியாக உள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த பங்களிப்புகளை வழங்கியதற்காக ஆறு விருதுகளை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். மேலும், “சமத்துவமின்மை, மோதல்கள், உணவுப் பாதுகாப்பின்மை, காலநிலை நெருக்கடி மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றை உலகம் எதிர்கொள்ளும் நேரத்தில், உலகம் முழுவதும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது” என்று கூறினார்.
விருதை பெற்ற ‘ஆஷா’ ஊழியர்கள், மகிழ்வைவிட தங்கள் கோரிக்கையை பிரதானமாக வைக்கிறார்கள். தங்களின் குறைவான ஊதியம் குறித்து தொடர்ந்து வேதனைக் குரல்களை வெளிப்படுத்தி வரும் இவர்கள், விருதைவிட தங்களுக்கு போதுமான கூலி கிடைப்பதே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்கிறார்கள். 4,000 ரூபாய் சம்பளம், கோவிட் போனஸாக அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாயை உள்ளடக்கிய 5,000 – 8,000 ரூபாய் வரையிலான ஊக்கத்தொகை என, மாதம் சராசரியாக 10,000 ரூபாய் வரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தாங்கள் செய்யும் பணியை கருத்தில்கொண்டு தங்களுக்கான உறுதித் தொகையை 15,000 ஆக்கவும், அல்லது ஊக்கத்தொகையுடன் 20,000 ரூபாய்வரை வரும்படியும் உயர்த்தி வழங்கக்கோரும் குரல்கள் இம்முறையும் எழுந்துள்ளன.