வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறினார்.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடர் நடக்கிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.
லீக் சுற்றில் அசத்திய தமிழகத்தின் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதில் 4வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் இ வெய்யை 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்தின் நம்பர் ஒன் வீரரான அனிஷ் கிரியை சந்தித்தார். இதில் 3.5 – 2.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா பைனலுக்கு முன்னேறி அசத்தினார். இதன் மூலம் ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மற்றொரு அரையிறுதியில், கார்ல்சனை வீழ்த்திய சீனாவை சேர்ந்த டிங்லிரன், பைனலுக்கு முன்னேறினார். டிங்லிரனுடன் பைனலில் மோதும் பிரக்ஞானந்தா, அவரை வீழ்த்தி மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு துவங்குகிறது.
பகலில் தேர்வு.. இரவில் போட்டி:
இரவில் ஆன்லைன் ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ செஸ் போட்டியில் பங்கேற்கும் பிரக்ஞானந்தாவுக்கு போட்டி முடிய இரவு 2 மணி ஆகி விடும். அதன் பின் பகலில் 11ம் வகுப்பு தேர்வுகளை எழுதி வருகிறார். அரையிறுதியில் வென்ற பின் பிரக்யானந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது: மணி நள்ளிரவு 2 ஆகி விட்டது. இப்போது நான் தூங்கினால் தான், காலையில் எழுந்து 8.45 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும். தற்போது 11ம் வகுப்பு இறுதி தேர்வு நடந்து வருகிறது. இன்று வணிகவியல் தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்று விடுவேன் என நம்புகிறேன். செஸ், தேர்வு இரண்டிலும் வெற்றி பெறுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement