இணையவழியில் 25 வகையான சான்றிதழ்கள் – அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் 25 வகையான சான்றிதழ்களை  எங்கிருந்தும் ஆன்லைனில் பெறும் வசதி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்மகேஷ், அரசு பள்ளி மாணவர்களுக்கு  காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு லைப்ரரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், அங்கு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25வகையான சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவித்தவர், முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.  ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டபடி,  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரி கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும். அவர்கள் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது.

அதுபோல் இனிமேல் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறாது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, கல்வி இணைச்சான்று , புலப்பெயர்வு சான்று போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை, பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின் பொதுசேவை மையங்கள் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சேவை வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.எஸ்.டி.எம். சான்றை வழங்கினார். படிப்படியாக அனைத்து சேவைகளும் ஜூன் 2022க்குள் இணைய வழியில் பொது சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும்.

ஆசிரியர்களின் நிருவாகப்பணியை குறைப்பதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பதிவேடுகளை கணினி மயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின் தொடக்கமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இப்பதிவேடுகளை 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நேரடியாக பராமரிக்கத் தேவையில்லை, மின்பதிவேடு களாக வைத்திருந்தால் மட்டும் போதுமானது. இதனால் ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த இயலும். படிப்படியாக ஜூன் 2022க்குள் பிற அனைத்து பதிவேடுகளும் மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். இம்முறையில் ஏற்படுகின்ற சிரமங்களைக் களையும் வண்ணம் அவர்தம் கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பயன்பெறுவர்.

ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளி தொடங்கவிருக்கும் நாள், செயல்படும் நாட்கள், தேர்வு, விடுமுறை தினங்கள் என அனைத்துத் தகவல்களையும் கொண்ட கால அட்டவணை பெற்றோர், மாணவர், ஆசிரியர்களின் நலனுக்கென பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான ஆசிரியர்களும் மாதந்தோறும் பெறவேண்டிய அடிப்படை, திட்டம் சார்ந்த, தன்விருப்பப் பயிற்சிகளுக்கென கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் தங்களது பயிற்சி குறித்து தெளிவாகத் தெரிந்து அதன் பயனை முழுமையாக பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.