புது டெல்லி: இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஒரு பிளாஸ்டிக் வாளியின் விலை ரூ.25,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. அதை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
உலகம் முழுவதும் தங்களது தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை வீடு தேடி சென்று விநியோகித்து வருகிறது அமேசான். இதில் உலக மக்கள் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராகவும், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளராகவும் உள்ளனர். இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இ-காமர்ஸ் தளங்களில் அமேசான் தளமும் ஒன்று. இந்நிலையில், இந்த தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியின் விலை இப்போது பேசு பொருளாகி உள்ளது.
என்ன நடந்தது? அமேசான் தளத்தில் ‘வீடு மற்றும் பாத்ரூமுக்கான பிளாஸ்டிக் வாளி செட் 1’ என்ற தலைப்பில் விற்பனைக்காக பிளாஸ்டிக் வாளி பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அசல் விலை ரூ.35,900 என்றும். 28 சதவீதம் தள்ளுபடி போக ரூ.25999 விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நெட்டிசன்களின் கண்ணில் பட்டுள்ளது. அதை உடனடியாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டர் உட்பட சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் அவரவர் தங்களது கருத்துகளையும் கேப்ஷன்களாக கொடுத்துள்ளனர்.
“இப்போது தான் இதனை அமேசானில் பார்த்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை”, “தசம புள்ளிகளில் விற்பனையாளர் தவறு செய்திருக்கலாம். அதன் அசல் விலை ரூ.259.99 என இருக்கலாம்”, “வாளி ஸ்டாக் இல்லையாம்”, “அற்புத விளக்கை போல அற்புத வாளியாக இது இருக்கலாம்” என கமெண்ட்டுகள் பறந்துள்ளது.
இது தொடர்பாக அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த விவகாரத்தை கூர்ந்து கவனிப்பதாகவும் தெரிவித்துள்ளது.