சென்னை: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விசாரணை அதிகாரி டேவிதார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் மழை – வெள்ளம் தேங்கியது குறித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த ஜன.6-ம் தேதி பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படியானதா? திட்டத்துக்கு மத்திய, மாநிலஅரசுகளின் நிதி விதிப்படி செலவழிக்கப்பட்டதா? பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய விதிப்படி வழங்கப்பட்டதா? பணிகளின் தரத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? – இவை குறித்து விசாரணைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விசாரணை அதிகாரி சென்னை, திருச்சி உட்பட ஸ்மார் சிட்டி பணிகள் நடைபெற்ற நகரங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார். இதன்படி இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ள குளங்கள் உள்ளிட்ட திட்டங்களை நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக தகவலை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.