வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் , நிறுவனம் ஒரே சொத்தை இரு அரச வங்கிககளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம்

வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனம் ஒரே சொத்தை இலங்கை வாங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதா என்பது தொடர்பில் கோப் குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை வங்கியின் 2018 மற்றும் 2019 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராயும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தலைமையில்  (24) நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய  குழுக் கூட்டத்தின் போதே இது பற்றி கலந்துரையாடப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிக செயற்படாத கடன்களைக் கொண்ட சில நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். நிறுவனம் தொடர்பில் இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வரையறுக்கப்பட்ட டபிள்யு. எம். மெண்டிஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு வரை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களுக்கு அடமானம் வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பில் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வங்கி அதிகாரிகளிடம் வினவினர். இதன்போது அதிகாரிகள் குறித்த சொத்துக்கள் தொடர்பில் தெரிவிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க மற்றும் கௌரவ எஸ்.எம். மரிக்கார் ஆகியோர், அண்மையில் மக்கள் வங்கி கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த நிறுவனம் குறித்த சொத்தை அடமானம் வைத்து மக்கள் வங்கியிலும் கடன் பெற்றுள்ளதாக மக்கள் வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டனர். ஒரே சொத்தை அடமானம் வைத்து இந்த இரண்டு வங்கிகளிலிருந்தும் சுமார் 7 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதனால், இது தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் விசாரணை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 

இது தொடர்பான நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், இது போன்ற கடுமையான விடயங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, எதிர்காலத்தில் உரிய இரண்டு வங்கிகளையும் குழுவுக்கு அழைத்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து அந்த அறிக்கை மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். 

அதேபோன்று, 2020 இல் பணிப்பளார் சபை தீர்மானத்துக்கு அமைய வங்கியினால் ஆரம்ப முதிர்வு ஓய்வூதிய நலனாக முன்னாள் பொது முகாமையாளருக்கு செலுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய 32,039,733 ரூபா நிதி தொடர்பில் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த முகாமையாளர் ஆரம்ப முதிர்வு ஓய்வூதியம்  செல்ல நடவடிக்கை எடுக்கும் போது தொழிற்சங்கங்கள் வேலை திருத்தம் மேற்கொண்டதாகவும், இதனால் ஒரு நாளைக்கு 75 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் இலங்கை வங்கியின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். இதனால் அந்த வேலைநிறுத்தத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு இந்தத் தீர்மானம் எடுக்கவேண்டி ஏற்பட்டதாக தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரை அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். வங்கிக்கு ஒரு நாளில் ஏற்பட்ட நட்டம் பல நாட்கள் இடம்பெறக்கூடும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கியின் தலைவர் மேலும் தெரிவித்தார். 

மேலும், அரசுக்கு சொந்தமான முயற்சியாண்மைகளின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் மொத்த பற்றாக்குறை தொடர்பில் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கடன்களை மீளப்பெற இயலாத அரசாங்க முயற்சியாண்மைகளுக்கு கடன் வழங்குவது பொருத்தமலில்லை என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுகள் மாற்று சேவைகளை பெற்றுக்கொள்வதில் இலங்கை வங்கிக்கு காணப்படும் இயலுமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கணக்கிடப்படாத ஏனைய துறைகளையும் சேர்த்து நிலைமை அறிக்கையொன்றை ஒரு மாத காலத்துக்குள் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் பரிந்துரை வழங்கியதுடன், நாட்டின் பிராதன வங்கியாக இலங்கை வங்கி எடுக்கும் சரியான தீர்மானங்களை பாராட்டுவதாகவும், பிழையான விடயங்கள் காணப்பட்டால் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அழுத்கமே, கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ பாட்டளி சம்பிக்க ரணவக்க, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி. சில்வா, கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.