ஆர்.ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
காமெடி நடிகர் என்று பயணித்த நடிகர் ஆர்.ஜே பாலாஜி கடந்த 2019 எல்.கே.ஜி படத்தை இயக்கி இயக்குநராகவும் உருமாறினார். இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, நயன்தாராவை வைத்து ’மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், தற்போது மூன்றாவதாக ‘வீட்ல விசேஷம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் வெளியான ’பதாய் ஹோ’ படம் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கதைக்கொண்ட இப்படத்தில் ஆயூஷ்மான் குரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்து பாராட்டுகளை குவித்தனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வாங்கி வைத்திருந்தார். கடந்த ஆண்டு ‘பதாய் ஹோ’ ரீமேக் ‘வீட்ல விசேஷம்’ படமாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பு ப்ளஸ் இயக்கத்தில் உருவாகி வந்தது. வரும் ஜுன் 17 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
”திருமணமாகும் வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும்போது 55 வயதில் கர்ப்பிணியாகும் ஊர்வசி தனக்கே உரிய நகைச்சுவையான நடிப்பில் ட்ரைலர் முழுக்க கவனம் ஈர்க்கிறார். குழந்தைப் பிறக்கும்போது ‘உன்னால முடியும்… தாய்மை மகத்தானது.. பெண்மை புனிதமானது.. சிங்கப்பெண்ணை அவுத்துவிடு” என்று சத்யாராஜ் சொல்ல கன்னத்தில் அறைந்து ”மூடுடா வாயை. வந்து அனுபவிச்சிப் பாருடா… ஆம்பளை தடியா” என்று ஊர்வசி அறைவது ஒட்டுமொத்த ஆணாதிக்க சமூகத்தின் முகத்தில் அறைந்ததுபோல் இருக்கும் அந்தக் காட்சி நிச்சயம் படத்தில் விசேஷமானக் காட்சிதான். அபர்ணா பாலமுரளி, ஆர்.ஜே பாலாஜி, யோகி பாபு, புகழ் குறைவான காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்கள்.