மதுசாரம், போதைப்பொருள் – விழிப்புணர்வு; யாழ். பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான சமூக விழிப்புணர்வை உருவாக்குவது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையமும் கைச்சாத்திட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு இன்று (25.05.2022) யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தில் நடைபெற்றபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையம் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகரவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம், கலைப்பீடப் பிரதிப் பதிவாளர் திருமதி அனுஷா சிவனேஸ்வரன், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி ஏ.சி. ரஹீம் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் இணைந்துகொள்ளவிருக்கின்றனர்.

குறிப்பாக, மக்கள் மத்தியில் மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனையினால் ஏற்பட்டுவரும் சமூகச் சிக்கல்கள் பற்றிய ஊடகங்கள்வழி விழிப்புணர்விற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுடன், அதுதொடர்பான ஊடகப்படைப்புக்களை உருவாக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர்.

அதேவேளை, இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனைக்கு எதிரான கருப்பொருளைக் கொண்ட குறும்படப் போட்டியும், செயலமர்வுகளும் மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ளன.

வட மாகாணத்தில் மதுசாரம், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாவனையினை ஊக்குவிக்கும் ஊடகப் பண்பாடு பற்றிய ஆய்வுகளையும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்  நிலையத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளவுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.