நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது! அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சென்னை: நில உரிமையாளர்களுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.

கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் 802 ஹெக்டேர் நிலத்திற்கு நில எடுப்பு நடவடிக்கையின்கீழ் இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ரூ.1731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்று வரும் புறவழிச்சாலைகள், ரயில்வே மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்களின் அணுகுசாலைகள், உயர்மட்டச் சாலைப்பணிகள், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகள், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம், தனி நபர் பேச்சுவார்த்தை மூலம் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2010 ஆம் ஆண்டு முதல் விரைவாக நடைபெறாத காரணத்தால், பல்வேறு பணிகள் அரைகுறையாக முடிந்த நிலையிலும், பல பணிகள் அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படாத நிலையில் உள்ளன.நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படும்போது:

நிலத்தின் மதிப்பு கூடுவதால், அரசு கூடுதல் தொகை வழங்க வேண்டி உள்ளது.* கால தாமதத்தால் திட்டத்திற்கான மதிப்பீடும் பல மடங்கு உயர்கிறது. பணிகளை குறித்த நேரத்தில் தொடங்குவதிலும், முடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அரசு திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது தாமதப்படுகிறது.* இது தவிர நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒப்பளிப்பு செய்த பிறகு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், அரசுக்கு அதன் தொடர்பான வட்டியாக நிதி இழப்பு ஏற்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு, நில எடுப்பு பணிகளைத் துரிதப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறைக்கென, 5 மண்டல நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 18 தனி வட்டாட்சியர் அலகுகள் தோற்றுவிக்க அனுமதி வழங்கியுள்ளார். மேலும், முன்பே உள்ள 9 நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 44 தனி வட்டாட்சியர் அலகுகள் நில எடுப்பு தேவையின் அடிப்படையில், விரிவுபடுத்தி புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 357 நிலம் கையகப்படுத்தும் பிரேரணைகள் 15 (2) அறிவிக்கை வெளியிடப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையில் நிலுவையில் உள்ளன.

இப்பிரேரணைகளுக்கான 15 (1) வரைவு அறிவிக்கையை உடனடியாக நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்படும்.அதே போல 2009 ஆம் ஆண்டு முதல் 15 (1) பிரிவின்கீழ், அறிவிக்கை வெளியிடப்பட்டு, 203 கருத்துருக்கள் இறுதி தீர்வம் வழங்கப்படாமல் உள்ளது. இப்பணிகளுக்கு விரைவில் இறுதி தீர்வம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். வழக்குகளை “லோக்அதாலத்“ மூலம் விரைந்து முடிக்க ஏதுவாக உயர் மட்டக்குழு அமைக்க, நில நிர்வாக ஆணையர் அவர்களால் முன்மொழிவு கள் அரசுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

2022 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் 802 ஹெக்டேர் நிலத்திற்கு நில எடுப்பு நடவடிக்கையின்கீழ் இறுதி தீர்வம் பிறப்பிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ரூ.1731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.