சென்னை ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை, போலீசார் ஒரு மணி நேரத்தில் கண்டறிந்து, பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல்போன ஒன்றரை வயது ஆண் குழந்தையை, ரயில்வே போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமார்-லதா தம்பதியினர் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று விட்டு சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
இவர்கள் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றபோது, அவர்களின் ஒன்றரை வயது மகன் காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து லதா ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் வழி தவறி சென்ற சிறுவனை அடையாளம் கண்டு, ஒரு மணி நேரத்தில் மீட்டனர். பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஒரு மணி நேரத்தில் காணாமல் போன குழந்தை மீட்டுக்கொடுத்த போலீஸாருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.