புதுடெல்லி: சீனா நாட்டினருக்கு பாஸ்போர்ட் வாங்கி தருவது தொடர்பாக ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை, பஞ்சாப்பை சேர்ந்த தொழிற்சாலைக்காக சட்டவிரோதமாக சீனாவை சேர்ந்த 263 தொழிலாளர்களை அழைத்து வர விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அதாவது சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உட்பட ஒன்பது இடங்களில் கடந்த 17ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்த சிபிஐ, அவரை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், ‘உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. வேண்டுமானால் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெற கூடுதல் அவகாசம் தருகிறோம். அதாவது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு 72 மணி ( 3 வேலை நாட்கள் ) நேரத்திற்கு முன்னதாக சிபிஐ எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும். வரும் 24ம் தேதி லண்டனிலிருந்து கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பியவுடன் சீனர்களுக்கு விசா பெற்று தர ரூ.50 லட்சம் பணம் பெற்ற வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக லண்டன் சென்ற கார்த்தி சிதம்பரம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் டெல்லி வந்தடைந்தார். இதையடுத்து சீனா பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ தரப்பில் நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முன்னதாக எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் கார்த்தி சிதம்பரம் நாளையோ அல்லது அதன் மறுநாளோ கைது செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.அமலாக்கத்துறை வழக்கு பதிவுஇந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தரப்பிலும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக சம்மன் பிறப்பிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் விரைவில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது..