சீயோல்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு துவங்கியது முதல் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ஐசிபிஎம்) சோதித்து உலக நாடுகளை அதிரவைத்தது.
இந்த நிலையில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை ஒரே நாளில் சோதித்ததாக தென்கொரியா ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை வெளியிட்டுள்ள அறிக்கைல், “வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் இருந்து கிழக்கு கடற்கரை நோக்கி வீசப்பட்ட ஐசிபிஎம் ஏவுகணை 540 கி.மீ. உயரத்தில் 360 கி.மீ. தொலைவு வரை பறந்து கடலில் விழுந்தது. மற்ற 2 குறுகிய தூர ஏவுகணைகளும் 760 கி.மீ. உயரத்தில் 60 கி.மீ. தூரம் வரை சென்று கடலில் விழுந்தன” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வடகொரியா தனது 7-வது அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வகையில் அணுகுண்டை வெடிக்க வைக்கும் கருவியை சோதனை செய்ததாக தென்கொரியா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வடகொரியாவை அமெரிக்கா வலியுறுத்தியது
Advertisement