ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில், பிறந்ததும் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் குழந்தையை பெற்றோர் அடக்கம் செய்த ஒரு மணி நேரத்திற்குப் பின், அந்த குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிய வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் துரதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை நேற்று இறந்தது.
அலட்சியம்
ஜம்முவைச் சேர்ந்த பஷாரத் அகமது குஜ்ஜார் என்பவர் தன் மனைவி ஷமீமா பேகத்தை ஜம்முவின் பனிஹாலில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். கடந்த 23ம் தேதி காலை, ஷமீமா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தது. பிறந்த சில நிமிடங்களில் குழந்தை உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையை ஜம்முவின் ஹோலன் கிராமத்தில் பெற்றோர் அடக்கம் செய்தனர். இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மூடப்பட்ட சவக்குழியை மீண்டும் தோண்டி உடலை எடுத்து செல்ல அறிவுறுத்தினர். அடக்கம் செய்த ஒரு மணி நேரத்திற்கு பின் வேறு வழியின்றி சவக்குழியை மீண்டும் திறந்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
அப்போது அந்த குழந்தை மூச்சு விடுவது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பெண் குழந்தை நேற்று காலை உயிரிழந்தது.ஜம்முவின் மாவட்ட துணை மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தை கண்டித்து, குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜம்மு சுகாதாரத் துறை இயக்குனரகம் சார்பில் நான்கு பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement