புதுடெல்லி,
‘ஜன கண மன’ தேசியகீதத்துக்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும், அனைத்து பள்ளி, கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை நீதிபதி விபின் சங்கி (பொறுப்பு), நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் ஆஜராகி, வந்தே மாதரம் பாடலை தேசியகீதமாக சென்னை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு அங்கீகரித்து, கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறை பாட வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும் இது தொடர்பாக மந்திரிசபை குழுவை அமைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டும், எவ்வித முன்னேற்றமும் இல்லை என வாதிட்டார். வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘ஜன கண மன’ தேசிய கீதத்துக்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அந்தஸ்து வழங்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (என்.சி.இ.ஆர்.டி.), டெல்லி அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, இந்த பொதுநல மனு விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.