வாஷிங்டன்,
அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் துப்பாக்கி கலாசாரம் அபாயகரமான வகையில் பெருகி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூடு ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த கொடூர சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள் பின்வருமாறு:-
டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் என்கிற பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 500-க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றன.
நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்தார். பள்ளியின் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது, வகுப்பறை ஒன்றுக்குள் நுழைந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கண்மூடித்தனமாக சுட்டார். குழந்தைகள் அனைத்தும் பயத்தில் கண்ணீர் விட்டு அழுது கதறி துடித்தன.
ஆனால் அந்த இளைஞர் சற்றும் ஈவுஇரக்கமின்றி பால்மனம் மாறாத அந்த பச்சிளம் குழந்தைகளை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தார். குழந்தைகளை காப்பற்ற வந்த ஆசிரியர்களையும் அவர் சுட்டு வீழ்த்தினார். இந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.
இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.
அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். அதை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீஸ் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிய நபர் பள்ளிக்கூடம் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த 18 வயதான சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் பள்ளிக்கூடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு வீட்டில் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி இந்த கொடூர செயலை அரங்கேற்றுவதற்கு முன்பு கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே வேளையில் அவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதற்கான காரணம் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோ பைடன் வேதனை
ஆசிய நாடுகளில் பயணத்தை முடித்து விட்டு நேற்று அமெரிக்கா திரும்பிய ஜோ பைடன் டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வேதனையுடன் பேசியதாவது:-
டெக்சாஸ் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமான ஒன்று.
இதற்கு என்ன காரணம்? ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நாம் வெறுமென பேசிதான் வருகிறோம். எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. துப்பாக்கி கலாசாரத்துக்கு என்று நாம் முற்றுப்புள்ளி வைக்க போகிறோம்? எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? நான் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன். நாம் துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது.
இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.