மரியுபோல் இடிபாடுகளில் 200 உடல்கள் மீட்பு| Dinamalar

கீவ்,-உக்ரைனின் மரியுபோல் நகரில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய படையினர் முழுமையாக கைப்பற்றினர். 4.50 லட்சம் மக்கள் தொகை உடைய இந்நகரில் தற்போது 1 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.அவர்களும் உணவு, குடிநீர், மின்சார வசதி இன்றி தவிக்கின்றனர். அங்குள்ள வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன.

மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் சினிமா தியேட்டர் மீது ரஷ்ய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் தியேட்டரில் பதுங்கி இருந்த 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையே, உக்ரைன் போரில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என, அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.கைப்பற்றப்பட்ட மரியு போல் நகரில், இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றி வந்தனர். அந்த கட்டடத்தின் அடித்தளத்தில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.இதையடுத்து, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது. இவர்கள் எப்போது உயிரிழந்தனர் என்ற தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.