அமலாபுரம்: ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது.
2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால், மிகவும் அமைதியான மாவட்டம் என பெயர் எடுத்திருந்த அமலாபுரத்தில் திடீரென புரட்சி வெடித்தது. அம்பேத்கர் பெயர் சூட்ட அப்பகுதியினரும் எதிர்க்கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்தனர். மெல்ல, மெல்ல இது அரசியல் சாயம் பூசப்பட்டு போராட்டமாக உருவெடுத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். அம்பேத்கரின் பெயரை சூட்டக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், திடீரென இந்த கண்டன ஊர்வலம் போராட்டக் களமாக மாறியது. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சமயத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசினர். இதைத்தொடர்ந்து போலீஸார் 5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
எஸ்பி உட்பட 20 போலீஸார் காயம்
இதனிடையே, ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்மிடிவரம் எம்.எல்.ஏ. சதீஷ்குமார் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் கார்களில் தப்பி உயிர் பிழைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்பி சுப்பா ரெட்டி, உதவி எஸ்பி லதா மாதுரி, டிஎஸ்பி மாதவ ரெட்டி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், ஊடகவியலாளர் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. 3 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
46 பேர் கைது, 144 தடை உத்தரவு
இது தொடர்பாக சுமார் 130 பேர் மீது அமலாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 46 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடும் பணியில் 10 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது கோனசீமா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தைப் பிரிக்கும்போதே அம்பேத்கர் பெயரை சூட்டி இருந்தால் இது போன்ற வன்முறை நடந்திருக்காது என ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கூறியுள்ளார். இது வேண்டுமென்றே மக்களை தூண்டும் செயல் எனவும், போலீஸாரின் அலட்சியப் போக்கே வன்முறைக்கு காரணம் என்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.