மங்களூரு மசூதி குறித்து சர்ச்சை கிளப்பும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை; டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

பெங்களூரு

மங்களூரு மசூதி குறித்து சர்ச்சை கிளப்பும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்ட நடவடிக்கை

மங்களூருவில் உள்ள மலலி மசூதியில், இந்து கோவில் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக சில இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் கூறியுள்ளனர். பா.ஜனதா அரசு கர்நாடகத்தை சிதைக்கிறது. பா.ஜனதாவினரின் நம்பிக்கை, சொந்த விஷயங்களில் தலையிட மாட்டோம். ஆனால் மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயத்தில் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்க வேண்டாம்.

இதனால் கர்நாடகத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. பா.ஜனதாவினர் உணர்வு பூர்வமான விஷயங்களை தங்களின் வீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசின் நிர்வாக விஷயங்களில் அமைப்புகள் தலையிடுவது சரியல்ல. அத்தகைய அமைப்புகள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விவகாரங்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

அரசியல் அதிகாரம்

குழப்பங்கள் விளைவிப்பதை நான் கண்டிக்கிறேன். போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். அரசியல் சாசனத்தின் விருப்பப்படி அனைத்து சமூகங்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. இதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. மேகதாது பாதயாத்திரையின்போது விதிகளை மீறியதாக அரசு எங்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கோர்ட்டு எங்களுக்கு சம்மன் அனுப்பியது. கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மந்திரிகளின் விதிமீறல்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாற்ற முடியாது

பா.ஜனதா அரசு தனது அரசியல் கொள்கைகளை பாடத்திட்டத்தில் புகுத்துகிறது. வரலாற்றை திருத்தி, அடுத்த தலைமுறைக்கு புதிய வரலாற்றை கற்பிக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. ஆனால் வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. நாட்டின் எந்த மாநிலத்திலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தவில்லை. ஆனால் கர்நாடகத்தில் அதை செயல்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.