விஜயவாடா: தங்கைக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதாலும், தக்க நீதி கிடைக்காது என முடிவு செய்து, தாய் மற்றும் தங்கையுடன் அவரது அண்ணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டு வண்டியில் புறப்பட்டு சென்றுள்ளார்.
தேசிய சகோதரர் தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பல சகோதர, சகோதரிகள் தங்களது அன்பை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பரிமாறிக் கொண்டனர். ஆனால், உடன்பிறந்த ஒரு அண்ணன், தனது தங்கைக்கு மாமியார் வீட்டில் நடந்த கொடுமைக்காக நீதி கேட்டு, டெல்லிக்கு தனது தங்கை மற்றும் தாயாருடன் மாட்டு வண்டியில் சகோதரர் தினத்தன்று புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார். இவர் நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
என் பெயர் நாக துர்கா ராவ். விவசாயி. என்.டி.ஆர் மாவட்டம், நந்திகாமா மண்டலம், முப்பள்ளு கிராமம்தான் எங்களின் சொந்த ஊர். எனது தங்கை நவ்யதா (28). இவருக்கும், சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த நரேந்திர நாத்துக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நடந்த இத்திருமணத்திற்கு, எங்கள் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ரூ.23 லட்சமும், மேலும், 320 கிராம் தங்க நகைகளும், வெள்ளியில் பூஜை பொருட்களும், 3 ஏக்கர் விவசாய நிலமும் மணமகனுக்கு வழங்கினோம். ஆனால், திருமணமான பின்னர் மணமகனின் நடத்தை சரியில்லை என்பது தெரியவந்தது. அனைத்து தீய பழக்க வழக்கங்கள் இருந்துள்ளன.
மேலும், மாமியார், நாத்தனார் கொடுமையும் கூட. அடிக்கடி குடித்துவிட்டு எனது தங்கையை அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இது குறித்து சந்தர்லபாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதால், போலீஸார் அந்த புகாரை ஏற்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பிறந்த வீட்டிற்கே எனது தங்கை வந்துவிட்டாள். இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தோம். ஆயினும் எனது தங்கையை சரிவர பார்த்துக் கொள்ளவில்லை. மாறாக அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், ஆந்திராவில் எனது தங்கைக்கு நீதி கிடைக்காது என முடிவு செய்து, டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானித்துள்ளேன். இதன் காரணமாக எனது தங்கை மற்றும் தாயார் ஜோதியுடன் மாட்டு வண்டியில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறேன். அங்கேயே இருந்து வழக்கை முடித்துக் கொண்டுதான் நாங்கள் ஊர் திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.