தீப்பிடித்த சில வீடுகளில் இரசாயன உரங்கள்: விசாரணை

அண்மையில் நடந்த கலவரம் காரணமாக சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதையடுத்து, சில அரசியல்வாதிகளின் வீடுகளில் அதிக அளவில் யூரியா உரம் இருப்பதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின.

இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் கடந்த திங்கட்கிழமை (23) கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த அரசியல்வாதிகளின் வீடுகளில் காணப்பட்ட யூரியா உரங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த இரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டவையா, அல்லது தனியார் வர்த்தகர்களிடம் தற்போதைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டவையா, அல்லது உர செயலகத்தினால் முன்னர் வழங்கப்பட்ட உரங்களா என்பன தொடர்பில் தெளிவான அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சர், தேசிய உர செயலகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளின் பயிர்களுக்கு இரசாயன உரங்கள் கிடைக்காத நிலையில், சில அரசியல்வாதிகள் தமது வீடுகளில் உரங்களை சேமித்து வைத்திருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய உர செயலகத்தின் அறிக்கைகள் கிடைத்த பின்னர், தீப்பிடித்த வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற உரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.