அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எனது தலைமையில் செயல்படுவார்கள் என்று வி.கே.சசிகலா உறுதிபடத் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓர் அரசு மக்களுக்கு நல்லது செய்தாலும் சரி, மக்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி அதைவெளியில் கொண்டு வருவது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்தான். அதுபோன்ற நேரத்தில் அரசு தன் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர, செய்தியாளர்கள், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல. ஜெயலலிதாவுடன் அதிமுகவில் இப்போது இருப்பவர்களை ஒப்பிட முடியாது. கட்சித் தொண்டர்கள் முடிவு செய்து ஓர் இயக்கத்துக்கு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் எல்லோரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். இப்போது அதுபோன்ற நிலைமைஅங்கு இல்லை. அதனுடைய வெளிப்பாடுதான் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. கட்சித்தொண்டர்கள் மட்டுமல்ல மக்களும் அவர்களுடைய குறைகளை என்னிடத்தில் கூறுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் மக்களுக்கு அது எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அதைப் பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் விரைவில் அமைப்போம் என்று நான் சொன்னேன். அதற்கு முதல்படியே மக்களின் கருத்து அமைந்துள்ளது. கட்சியைப் பொருத்தவரை எல்லாமே தொண்டர்கள்தான். அவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் நான் அதிமுக தலைமை ஏற்பேன் என்று சொல்கிறேன். .
தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகமாகியுள்ளன. இதற்கு நிர்வாகமின்மையே காரணம். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.
ஜெயலலிதா மே மாதத்தில் மேட்டூர் அணையைத் திறந்துவிட்டுள்ளார். அவர் திறந்துவிட்டார் என்பதற்காக திமுக ஆட்சியிலும் மே மாதத்தில் மேட்டூர் அணையைத் திறந்துவிட்டுள்ளனர். தூர்வாரும் பணிநடைபெறவில்லை. அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எனது தலைமையில் செயல்படுவார்கள். அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும்.
தமிழக அரசு மத்திய அரசுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது மக்கள்தான். திமுக ஓராண்டு பட்டிமன்றம் போல இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.