உணவுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையேயான மேலதிக ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்திக் ஆகியோரை 2022 மே 25 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
நாட்டில் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைகளின் அபிவிருத்திக்கு வழங்கப்படும் உதவிகளுக்காக, உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம், குறிப்பாக இலங்கையில் உள்ள நாட்டிற்கான அலுவலகத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். நாடு தற்போது எதிர்கொள்ளும் பல சவால்களை சுட்டிக் காட்டிய அதே வேளையில், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்த உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்டப் பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும் என இரு பிரதிநிதிகளும் அமைச்சரிடம் உறுதியளித்ததுடன், சாத்தியமான உணவுப் பாதுகாப்பு சவால்களைத் தணிப்பதற்கான அவர்களது தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினர்.
இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. வுடன் நெருங்கிய, நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், இக்கட்டான காலங்களில் ஐ.நா. இலங்கைக்கு ஆதரவாக இருந்ததாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இந்தநிலையில், இலங்கைக்கு இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க உதவும் வகையில் நாட்டில் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் பிரதமர் விடுத்த கோரிக்கையை அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மே 26