வாஷிங்டன் : கொரோனாவை தொடர்ந்து ‘மங்கிபாக்ஸ்’ என்ற அம்மை நோய், 19 நாடுகளில், 131 பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புளும்பெர்க் நிறுவனத்தின் மூத்த மருந்தியல் ஆய்வாளர் சாம் பசேலி கூறியதாவது:
மங்கிபாக்ஸ் நோய், தட்டம்மை, பெரியம்மை போன்றது தான். இதில் உயிரிழப்பு மிகக் குறைவானது. இருபது ஆண்டுகளுக்கு முன் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் மங்கிபாக்ஸ் வைரஸ் காணப்பட்டது. கடந்த, 2003ல் அமெரிக்காவில், 71 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
ஆப்ரிக்க நாடான கானாவில் இருந்து அமெரிக்கா எலிகளை இறக்குமதி செய்த போது, அவற்றின் வாயிலாக நாய்களுக்கு பரவி பின் மனிதருக்கு மங்கிபாக்ஸ் பரவியது.மங்கிபாக்ஸ் வைரஸ் பாதித்தால் முதலில் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். பின், உடலில் சிறிய சிகப்பு திட்டுக்கள் தோன்றும். இதையடுத்து கொப்பளங்கள் எழும்பும்.
அவற்றில் இருந்து வடியும் திரவம், எச்சில் போன்றவற்றால் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளோருக்கு வைரஸ் பரவும்.தட்டம்மையை தடுக்கும் ஊசி மருந்து, மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பையும் தடுக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா போலன்றி மங்கிபாக்ஸ் வைரஸ் பரவும் வேகம் மிகக் குறைவு. அதனால் அனைவருக்கும் தடுப்பூசி அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement