மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த 21-ந்தேதி கோவிலில் நரிக்குறவர் பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் பலர் நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும் தெரிவித்து வந்தனர்.அவரும் கோவிலில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் நரிக்குறவ பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக கோவில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, மடப்பள்ளி சமையல்காரர் குமாரி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறை நிர்வாகம் “சஸ்பெண்ட்” செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக மேலாளர் சந்தானத்திடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.