முதல்வர் பசவராஜ் மீது எடியூரப்பா அதிருப்தி – கட்சிக்குள் புகைச்சல்!

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா, பாஜக வயது மூப்பு கொள்கை மற்றும் அமைச்சர்கள் அதிருப்தி காரணமாக, முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக,
பி.எஸ்.எடியூரப்பா
தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த, பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். 2023 சட்டப்பேரவைத் தேர்தலை இவரது தலைமையில் எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இதற்கிடையே, கர்நாடக மேல் சபை தேர்தலில் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் பி.எஸ்.எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் கட்சி யாருக்கு டிக்கெட் கொடுத்துள்ளதோ அதை ஏற்கிறோம். எனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அவரது பணியை பார்த்து கட்சி அவருக்கு முதலில் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியும், பிறகு கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவியும் வழங்கியுள்ளன.

வரும் நாட்களிலும் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும். அவர் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறார். இந்த விவகாரத்தில் எனக்கு அதிருப்தி இல்லை. யாரும் அதிருப்தி தெரிவிக்க கூடாது. குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. கட்சி மேலிடம் எடுத்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கர்நாடக மேல் சபை தேர்தலில் போட்டியிட, தனது மகன் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், கட்சியில் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும் என, குறிவைத்து எடியூரப்பா பேசி இருக்கிறார். மேல் சபை தேர்தலில் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளால், கட்சியில் முக்கிய பதவியை பெற, இப்போதே எடியூரப்பா துண்டு போட்டிருக்கிறார் என சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.