அதிமுக 2 ராஜ்ய சபா இடங்களுக்கு முன்னாள் அமைசசர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகிய இருவரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. 2 ராஜ்ய சபா இடங்களை அதிமுகவின் இரட்டைத்தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலா 1 இடம் என சரிசமமாக பங்கு போட்டு தங்கள் ஆதாரவாளர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் என்னனென்னவோ எல்லாம் நடந்துவிட்டது. அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று சசிகலா கூறிவரும் நிலையில், அவ்வப்போது உரசல்கள் இருந்தாலும், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த ராஜ்ய சபா தேர்தலில் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர். தர்மர் இருவரும் அதிமுகவின் ராஜ்ய சபா வேட்பாளர்களாக அறிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும் அதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே, இ.பி.எஸ்-சின் கைதான் ஓங்கி இருந்து வருகிறது. ஓ.பி.எஸ் துணை முதல்வர் பதவி ஏற்றார், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இ.பி.எஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலுக்கு பிறகு, இ.பி.எஸ் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரானார். வேறு வழியில்லாமல், ஓ.பி.எஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க வேண்டியதாக இருந்தது. அவ்வப்போது, இருவருக்கும் இடையே பலமுறை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உடன் சமரசம் செய்துகொண்டு சென்றார்.
இந்த சூழ்நிலையில்தான், ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் தொடங்கிய நிலையில்தான், அதிமுக தலைமை ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவித்தது. ஜெயலலிதா இருக்கும்போது ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்த நிகழ்வுகளும் உண்டு ஆனல, இந்த முறை மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம், ஓ.பி.எஸ் 2 ராஜ்ய சபா இடங்களில் 1 இடத்தை தனது ஆதாரவாளருக்கு தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாக, ஓ.பி.எஸ் மற்று. இ.பி.எஸ் இருவரும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓ.பி.எஸ் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், ஓ.பி.எஸ் உறுதியாக இருந்து தனது ஆதாரவாளர் ஆர் தர்மருக்கு சீட் வாங்கி கொடுத்து கட்சியில் தனது செல்வாக்கை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர். தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் இருந்தே ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக இருந்து வருகிறார். மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.தர்மருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வாங்கி கொடுத்துள்ளதன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பி.எஸ் நம்பிக்கை அளித்துள்ளார்.
அதே போல, மற்றொரு ராஜ்ய சபா வேட்பாளரான முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார். இவர் அதிமுகவின் சட்ட விவகாரங்களை கவனித்து வருகிறார். சசிகலாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகத்துக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிக்கப்பட்டுள்ளதால் இ.பி.எஸ் கட்சியில் தனக்கு ஆதரவாக வன்னியர்களின் ஆதரவை உறுதி செய்துள்ளார்.
அதிமுகவுக்கு கிடைத்த 2 ராஜ்ய சபா இடங்களை அதிமுக இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தலா 1 இடம் என சரிசமமாக பங்கு வைத்து சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“