வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஸ்டேடியத்தை ஐஏஎஸ் அதிகாரி தனது நாயுடன் வாக்கிங் செல்வதற்காக வீரர்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டில்லியில் இருக்கும் பிரபல மைதானங்களில் ஒன்று தியாகராஜ் ஸ்டேடியம். இங்கு தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் பல விளையாட்டு வீரர்கள் வந்து தினமும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். சர்வதேச தரத்தில் ஓடுதளம் அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு பயிற்சி மேற்கொள்பவர்கள் காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் கூட சிறந்து விளங்குகின்றனர். மேலும் மின்னொளி வசதியும் இருப்பதால் இரவு வரை வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இங்கு வீரர்கள் மாலை 7 மணிக்கு பின் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. 7 மணிக்கு பிறகு பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை மைதான அதிகாரிகள் வெளியேற வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இரவு 8.30 மணி வரையும் மைதானத்தில் மின் விளக்குகள் ஒளிர்வதால் ஏன் வீரர்களை விரைந்து வெளியேற்ற வற்புறுத்துகிறார்கள் என்பதற்கான காரணம் புரியாமல் பயிற்சியாளர்களும், வீரர்களும் குழம்பியிருந்தனர்.
இந்த நிலையில் டில்லியை சேர்ந்த வருவாய் முதன்மை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் வாக்கிங் செல்வதற்காக இந்த ஸ்டேடியம் மூடப்பட்டது தெரியவந்தது. வீரர்களை வெளியேற்றிய அடுத்த அரைமணி நேரத்தில் காரில் வரும் கிர்வார், தனது நாயை வாக்கிங் செல்வதற்காக அழைத்து வருகிறார். வாக்கிங் செல்வதற்காக மொத்த ஸ்டேடியத்தையும் கடந்த சில தினங்களாக காலி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. வீரர்கள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல கனவுகளுடனும், தேசத்திற்காக சாதித்திட வேண்டும் என்ற உத்வேகத்திலும் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களை வாக்கிங் செல்வதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரி வெளியேற்றிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சஞ்சீவ் கிர்வாரிடம் தொடர்பு கொண்டபோது, சில நேரங்களில் மட்டுமே தனது நாயை வாக்கிங் அழைத்து செல்வதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில் தான் வாக்கிங் செல்வதால் விளையாட்டு வீரர்களின் நடைமுறையை சீர்குலைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
Advertisement