அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இரண்டு பர்கர்கள் மற்றும் இரண்டு கிளாஸ் கோககோலாவை அவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். பரிமாறப்பட்ட கோககோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் குளிர்பானத்தில் மிதந்ததைப் பார்த்து பார்கவ் அதிர்ச்சி அடைந்தார்.
Here is video of this incidents happens with me…@McDonalds pic.twitter.com/UiUsaqjVn0
— Bhargav joshi (@Bhargav21001250) May 21, 2022
உடனடியாக தனது செல்போனில் பல்லி குளிர்பானத்தில் மிதப்பதை வீடியோவாக பதிவேற்றினார். “கடை மேலாளர் வெறுமனே குளிர்பானத்தின் விலையான ரூ.300-ஐ திருப்பித் தர முன்வந்தார். ஆனால் ஒரு உயிரின் மதிப்பு ரூ.300 தானா? நான் கடை மேலாளரிடம் அதே கோக்கைக் குடிக்கச் சொன்னேன், நான் உங்களுக்கு ரூ.500 தருகிறேன்” என பார்கவ் மற்றும் அவர் நண்பர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Great work done by @AmdavadAMC pic.twitter.com/bVC9yGMroi
— Bhargav joshi (@Bhargav21001250) May 21, 2022
நகராட்சி நிர்வாகத்திற்கும் பார்கவ் புகாரளிக்க மெக்டொனால்டு கடைக்கு வந்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். பொது பாதுகாப்புக்காக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தின் அனுமதியின்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மெக்டொனால்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
pic.twitter.com/P6162tS2D1
— Bhargav joshi (@Bhargav21001250) May 21, 2022
அந்த அறிக்கையில் “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு ஆகியவை எங்கள் வணிக நடவடிக்கைகளின் மையத்தில் உள்ளன. எங்களின் அனைத்து மெக்டொனால்டு உணவகங்களிலும் 42 கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதில் வழக்கமான சமையலறை மற்றும் உணவகத்தை சுத்தம் செய்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்ற கடுமையான செயல்முறைகள் அடங்கும். அகமதாபாத் கடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பலமுறை சரிபார்த்ததில் எந்த தவறும் இல்லை, நாங்கள் ஒரு நல்ல கார்ப்பரேட் குடிமகனாக அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM