சுவிஸ் மக்களுக்கு ‘ஷாக்’ கொடுக்க இருக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே வருவதால், சுவிட்சர்லாந்தில் மின்சார கட்டணமும் உயர இருக்கிறது. ஆகவே, 2023வாக்கில், சுவிஸ் மக்கள் மின்சாரத்துக்கு மிகவும் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உருவாகும் என சுவிஸ் மின்வழங்கல் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த கூட்டமைப்பு இம்மாதத் துவக்கத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சுவிட்சர்லாந்திலுள்ள மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள், 2023வாக்கில், மின் கட்டணத்தை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அத்துடன் மின் கட்டண உயர்வு சீராக அனைவருக்கும் ஒரே மாதிரியாகவும் இருக்கப்போவதில்லை. மின்சாரத்தை வேறொருவரிடமிருந்து வாங்கி விற்போர் வழங்கும் மின்சாரத்துக்கும், தாங்களே மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகிப்போருக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் போகிறது.
Photo credit: Valery Shanin | Dreamstime.com
சுவிட்சர்லாந்து தன்னிறைவு பெறும் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை. குளிர்காலத்தில் அதிக அளவில் அது மின்சாரத்தை வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில், மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வீடுகளை வெப்பப்படுத்துவதற்காகவும் மின்சாரத் தேவை அதிகரிக்க, சுவிட்சர்லாந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கும், அதன் தேவைக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது.
ஆக மொத்தத்தில், 2023ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களுக்கு மின் கட்டண அதிகரிப்பு என்னும் ஷாக் கொடுக்க உள்ளது சுவிட்சர்லாந்து!