பனாஜி: கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு ‘ஐ லவ் யூ’ என்று எழுதி சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலம் மார்கோவ் நகரில் வசித்து வருபவர் ஆசிப் செக். 2 நாட்கள் பயணமாக வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மர்கோவா போலீசில் ஆசிப் செக் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து வீட்டில் சோதனை நடத்தினர். தடயங்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில் ஒரு மார்க்கரை பயன்படுத்தி “ஐ லவ் யூ” என்று திருடர்கள் எழுதியிருப்பதை கண்டுபிடித்தனர். இதை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஆசிப் செக் அதிர்ச்சியடைந்தார். போலீசார் வழக்கு பதிந்து ெகாள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதே நேரத்தில், ‘அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வீடு புகுந்து திருடியது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.