புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.
இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார்.
இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணை மே 30ம்தேதி நடைபெறும் என நிதிபதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… டுவிட்டர் நிறுவனம் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த உத்தரவு