இந்தியாவில் சப்பாத்திக்கு வருகிறது நெருக்கடி – என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

உக்ரைன் போர் மட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியும், அதன் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷனில் வழங்கப்படும் கோதுமை இனி அரிசியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வட இந்திய மாநிலங்களில் சாதாரண குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சப்பாத்தி என்பது அரிதான ஒன்றாகும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் இந்த முறை கோதுமை மகசூல் 15-25 சதவிகிதம் குறைந்துள்ளது.

கோதுமை மாவின் தரம்

இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் 100 மில்லியன் டன்களைத் தாண்டினாலே அது அதிர்ஷ்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ இந்த ஆண்டு 111 மில்லியன் டன்கள் கோதுமை அறுவடை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி 10 மில்லியன் டன்கள் குறைவாகவே அறுவையாகும் எனத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு, ஒரு கிலோ இந்திய கோதுமையில் சுமார் 770 கிராம் மாவு கிடைத்தது. இந்த ஆண்டு, அது 720 கிராமாக குறைய வாய்ப்புள்ளது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான மார்ச் மாதத்தில் தானிய உற்பத்தி குறைந்துள்ளது.

உண்மையில் வணிகர்கள் கோதுமையை வாங்கி மாவாக மாற்றி பின்னர் விற்பனை செய்கிறார்கள். சாதாரணமாக கோதுமையில் இருந்து மாவாக மாற்றப்படும்போது கிடைக்கும் அளவு மற்றும் தரம் என்பது மிகவும் முக்கியம். இது சர்வதேச தர நிர்ணயத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஹெக்டோலிட்டர் சோதனையில் 76-க்கும் குறைவாக இருப்பது குறைவான அளவீடாகும். தற்போது, நல்ல கோதுமை தட்டுப்பாடு காரணமாக 72 என்ற குறைவான அளவீடுகளை தான் இந்திய கோதுமை பெறுவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் கொள்முதல்

இந்தியாவில் 110 மில்லியன் டன்கள் கோதுமை அறுவடை செய்யப்பட்டு அதில் 15 மில்லியன் டன்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வாறு 15 மில்லியன் டன்கள் கோதுமை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் இந்தியாவில் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது. இதனால் ஏற்றுமதி குறையும் என்றே தெரிகிறது. ஆனால் உலக நாடுகளுக்கே இந்தியா உணவு வழங்கும் என பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறினார். ஆனால் அந்த உறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாமல் போகக்கூடும்.

எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் அரசும்- அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 10 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் இது மத்திய அரசின் பேச்சுவார்த்தையை பொறுத்தது.

உக்ரைன் போர்

கோதுமை விலை உயர்வுக்கு உலகளாவிய காரணங்களும் உள்ளன. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முப்பது சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அதிகஅளவு கோதுமை ஏற்றுமதி ஆகும் சூழல் ஏற்பட்டது.

கோதுமை விலை உயர்வு

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமைக்கான தேவை உயர்ந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான இந்திய உணவுக் கழகம் 43 மில்லியன் மெட்ரிக் டன்கள் கோதுமையை கடந்த ஆண்டு கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அரசிடம் 19 மில்லியன் டன் கோதுமை இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு போதிய அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு விட்டதால் இந்த ஆண்டு 19.-20 மில்லியன் டன்கள் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கரோனா காலம்

ஆனால் கடந்த ஆண்டு இதன் இருப்பு கணிசமாகவே குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கோதுமை மத்திய அரசு வழங்கியது. இதனால் இந்திய உணவுக்கழகத்தின் தானியக்கிடங்குகளில் கோதுமை கையிருப்பு என்பது கணிசமாக குறைந்துள்ளது.

பிரதான் மந்திரி கரிப் அன்ன கல்யாண் யோஜனா திட்டத்தை 2022 செப்டம்பர் வரை நீட்டித்தது. முந்தைய கொள்முதல் மூலம் மிச்சம் இருக்கும் கோதுமையின் அளவை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கோதுமை வாங்கும் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உலகம் முழுவதுமே கோதுமைக்கு தேவை ஏற்பட்டுள்ளதால் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி வாய்ப்பால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். இதனால் அரசின் கையிருப்பும் ஒரளவு குறைந்துள்ளது.

இந்த சூழலில் இந்த ஆண்டு இலக்கான 19.5 மில்லியன் டன்கள் கோதுமையை கொள்முதல் செய்வதே பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது இந்திய உணவுக்கழக சேமிப்பு கிடங்குகளில் 30 மில்லியன் டன்கள் கோதுமை கையிருப்பதாக உள்ளது.

கரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்ட இலவச தானியங்கள் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டால் கையிருப்பில் பெரும்பாலும் பொது விநியோகத்திற்குச் செல்லும். உள்நாட்டில் வெளிச்சந்தையில் கோதுமை செல்வது தடைப்படும். இதனால் வெளிச்சந்தையில் கோதுமை விலை உயர்வதுடன் வர்த்தகர்கள் பதுக்கலில் ஈடுபடும் ஆபத்தும் உள்ளது. டெல்லியில் ஏற்கெனவே வர்த்தகர்கள் கோதுமையை பதுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கோதுமைக்கு பதில் அரிசி?

இந்த நெருக்கடியை சமாளிக்க பதுக்கலை தடுக்கவும், வெளிச்சந்தையில் கோதுமை விலை உயராமல் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும். இதுமட்டுமின்றி பொது விநியோகத்திட்டத்துக்கு செல்லும் கோதுமையின் அளவையும் குறைக்கலாம்.

அதற்கு பதில் அதிக அரிசியை மானிய பொது விநியோக அமைப்பின் மூலம் விநியோகிக்கலாம். அப்படி செய்தால் வட இந்தியாவில் சாதாரண குடும்பங்களில் சப்பாத்தி என்பது அரிதான பொருளாகி விடக்கூடும். வட இந்திய உணவில் அரசியை விடவும் சப்பாத்தி என்பது அவசியமான ஒன்றாக இருப்பது முக்கியமானது.

கருங்கடலில் ரஷ்ய ஏற்படுத்தியுள்ள முற்றுகையை உடைத்து அல்லது பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கான பாதுகாப்பு பாதை திறககப்பட்டதால் உலக அளவில் தட்டுப்பாடு குறையும். இதனால் இந்தியாவிலும் கோதுமை தட்டுப்பாடு குறைய வாய்ப்புண்டு.

ஆனால் உலகளாவிய வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது இந்தியாவில் சப்பாத்திக்கு சவால் ஏற்படவே செய்யும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.