வாஷிங்டன்: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) இந்த அபராதத்தை விதித்துள்ளது.
உலக மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சமூக வலைதளங்களில் ட்விட்டர் நிறுவனமும் ஒன்று. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் ட்விட்டரை பயன்படுத்தி தங்களது கருத்துகளை உலக மக்களுடன் பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு லாப ஆதாயத்திற்காக விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்ய ட்விட்டர் அனுமதித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை ட்விட்டர் பயனர்களிடத்தில் தெரிவிக்கவில்லை எனவும் தெரிகிறது.
இது 2011 மத்திய வர்த்தக ஆணைய உத்தரவை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது அந்த ஆணையம். அதோடு விதிகளை மீறியதற்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020 ஆகஸ்ட் வாக்கில் 150 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படலாம் என ட்விட்டர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் நாங்கள் அதி தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அபராதமும் செலுத்தி உள்ளோம். மேலும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தொடர்பான அப்டேட் மற்றும் அது சார்ந்த இயக்கத்திற்காக ஆணையத்துடன் இணைத்துள்ளோம்” என பிளாக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் ட்விட்டர் நிறுவன தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கீரன்.
ட்விட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கவுள்ள நிலையில் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.