நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய ஒன்றியம் ,நேற்றிரவு (25) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக அளவில் 219 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் குரங்கு அம்மை உலகளவில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் பரவியுள்ளதாக கூறியுள்ளது.
இந்த நோய் முதன் முதலாக ஆபிரிக்கா கண்டத்தில் பரவி உள்ளதாகவும் , மேற்கு அல்லது மத்திய ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு பரவி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவை இளைஞர்களிடையே அதிக அளவில் பரவி வருவதாகவும் , ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இலகுவில் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராட்சியத்தில் மே மாத தொடக்கத்தில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் இதுவரையில் 71 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பெயினில் 51 பேருக்கும் போர்த்துக்கல்லில் 37 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. அத்துடன் மே 20 ஆம் திகதி 38 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்காகஅதிகரித்துள்ளது.
மேலும் ஐரோப்பாவை தவிர கனடாவில் 15 பேருக்கும் அமெரிக்காவில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மையின் பாதிப்பு மிக குறைவானதாக உள்ளத்துடன் பாலியல் தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பலருடன் பாலியலில் ஈடுபடுபவர்கள் கடும் ஆபத்திற்கு உள்ளாகுவதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும் மருத்துவ அறிக்கையில் குரங்கு அம்மையினால் குறைவான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதுவரையில் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள 11 நாடுகளில் உள்ளது.
குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிப்பதன் மூலம், அதன் இரத்தம் மூலம் , அதன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் திரவத்தின் மூலம் நேரடியாக தொடர்பு கொள்வதால் இந்த நோய் பரவுகிறது, மேலும் ஆரம்ப அறிகுறியாக விரைவாக சொறி, சிரங்கு , அதிக காய்ச்சல் ஏற்படும்.
குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
K.Sayanthiny