இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ திரைப்படம் குண்டக்க மண்டக்க ஹிட். ‘லெஜண்ட்’, ‘சிம்ஹா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த இந்த கூட்டணி, மூன்றாவது முறையாக இணையும் அறிவிப்பையே #BB3 என்றுதான் அறிவித்தார்கள். மூன்றாவது படமும் ப்ளாக்பஸ்டர்தான் என்ற அசுரத்தனமான நம்பிக்கையில் அப்படி செய்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
ஸ்டன்ட், டான்ஸ், பன்ச் டயலாக் என பாலையா 360 டிகிரியில் தெறிக்கவிட்டிருப்பார். ‘கோவில்’ படத்தில் வடிவேலு சிலம்பம் சொல்லிக்கொடுக்கும்போது ஒரு வசனம் பேசியிருப்பார். ”கம்பு சுத்துறதுனு என்ன தெரியுமா ? உள்ள போய் வெளியே வந்து சைடு வழியா மேல வரணும். அதுக்கு பேருதான் கம்பு சுத்துறது”. அப்படியொரு ஆட்டம் ‘அகண்டா’வில் பாலையாவுடையது.
‘அகண்டா’ வெற்றியைத் தொடர்ந்து. அடுத்த இரண்டு படங்களையும் கமிட் செய்துவிட்டார். அதில் ஒன்று கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் ஆக்ஷன் எண்டர்டெயினர். இதில் பாலையாவுக்கு ஜோடி ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் லால், கன்னடாவில் இருந்து துனியா விஜய் என தென்னிந்திய சினிமா துறை ஒவ்வொன்றிலிருந்தும் கலைஞர்கள் இந்தப் படத்தில் இருக்கின்றனர்.
இதனை முடித்துவிட்டு, இயக்குநர் அனில் ரவிப்புடி (‘சரிலேறு நீக்கேவரு’, ‘F2’, ‘F3’ படங்களின் இயக்குநர்) இயக்கத்தில் நடிக்கிறார், பாலையா. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இதுவரை பாலையாவும் தமன்னாவும் இணைந்து நடித்ததில்லை என்பதுதான். இதில் பாலையாவுக்கு மகளாக நடிக்கவிருக்கிறார், டோலிவுட்டின் ரீசன்ட் க்ரஷான ஶ்ரீலீலா.
‘தொரக்க தொரக்க தொகிரந்தி’ பாடல் மூலம் பாப்புலரான இவர், ரவிதேஜாவுடன் ‘தமாகா’, பிரபாஸுடன் ‘ராஜா டீலக்ஸ்’, இன்னும் பெயரிடப்படாத சில படங்கள் என கால்ஷீட்டை நிறைத்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பாலையாவுக்கு மகளாக நடிக்கிறார். இவரை சுற்றிதான் கதை நடக்கும் என்கிறார்கள். பாலையாவை பயங்கர ஸ்டைலாக பவர்பேக்டு கதாபாத்திரமாக காட்ட முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. ஶ்ரீலீலாவின் பெயர் டோலிவுட் முழுக்க பரிட்சையமாகிவிட்டது. அடுத்ததென்ன… கோலிவுட்தான் !