இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா

தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ‛ஆச்சி' மனோராமா. 5 முதல்வர்களோடு நடித்தவர். 1000 படங்களுக்கு மேல் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக, தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். மனோரமா இன்று நம்மோடு இல்லை. ஆனால் இன்று அவருக்கு 85-வது பிறந்த நாள். அவரை பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

தஞ்சை மண்ணில் மே 26, 1937ம் ஆண்டு பிறந்தவர் கோபிசாந்தா எனும் மனோரமா. நாடகத்தில் நுழைந்து, தனது தனித்துவ திறமையால் நாடகத்தில் பள்ளத்தூர் பாப்பாவாக ஜெயித்த பிறகு, திருமணம், குழந்தை என வந்தபிறகே சினிமாவுக்கு வந்தார் மனோரமா.

நாடகத்தில் நடித்தாலும் சினிமா பெரும் கனவாக இருந்தது ஆச்சிக்கு. இன்ப வாழ்வு எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. செகண்ட் ஹீரோயின் வேடம். ஆர்வத்துடன் நடித்து வந்தார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு கண்ணதாசன் தயாரிக்க இருந்த உண்மையின் கோட்டை எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இன்ப வாழ்வில் இழந்ததை உமையன் கோட்டையில் பிடிக்க நினைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படமும் நின்றுவிட்டது.

மிகுந்த மன வருத்தத்துடன் மறுபடியும் நாடக உலகத்துக்குள்ளே வந்துவிட்டார். ஆனாலும் சினிமாவில் நடிக்க தொடர்ந்து முயற்சி செய்தார். கடைசியில் 1958-ல் கண்ணதாசனின், மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர் காமெடி கேரக்டர் என்றாலும் பரவாயில்லை, சினிமாவில் நடித்தால் போதும் என்று நடித்தார். அவரது வெற்றிப் பயணம் தொடங்கியது.

களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, தில்லானா மோகனாம்பாள், எதிர் நீச்சல், பட்டிக்காடா பட்டணமா, காசேதான் கடவுளடா எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். பிற்காலத்தில் சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லை தட்டாதே, அபூர்வ சகோதரர்கள் என கலக்கினார். 10000 படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை (கின்னஸ்) புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்தார்.

பத்மஸ்ரீ, தேசிய விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரர் மனோரமா. காலத்தை வென்று நிற்கும் இந்த மாபெரும் கலைஞரை போற்றுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.