அகமதாபாத்: ஆன்லைன் கேம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில், சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் உள்ள காம்லெஜ் மாவட்டத்தில் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது: “இவர்களது குடும்பம் ராஜஸ்தானிலிருந்து வந்துள்ளனர். கடந்த 23-ஆம் தேதி இரு சிறுவர்களும் மாறி மாறி ஒரே போனில் வீடியோ மேம் விளையாடியுள்ளனர். இதில் தனக்கான வாய்ப்பு வரும்போது சிறுவனின் தம்பி போனை வழங்க மறுத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த சிறுவன் (16 வயது) தனது தம்பியின் (வயது 11) தலையை கல்லால் தாக்கியுள்ளார். மயக்க நிலையில் இருந்த தம்பியை கயிற்றில் கட்டி கிணற்றில் கல்லுடன் வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் இருவரும் வீட்டில் இல்லாததை அறிந்த பெற்றோர், வெளியில் தேடியதில் மூத்த மகனை கண்டுபிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் தம்பியுடன் ஏற்பட்ட மோதலில் கொன்றதாக அந்தச் சிறுவன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சிறுவனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.